நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலையில் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கவும் மற்றும் விற்பனை செய்யவும் இன்று முதல் (அக். 2 ம் தேதி) பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விநியோகித்தல், விற்பனை செய்தலுக்கு அபராத தொகையாக முதல் முறை ரூ.25,000, இரண்டாம் முறையெனில் ரூ.50,000, மூன்றாம் முறை எனில் ஒரு லட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். வணிக வளாகங்கள், ஜவுளி பெரிய நிறுவனங்களுக்கு அபராதம் முறையே ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையும், மருந்து கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ரூ.5,000 வரையிலும், சிறு வணிக விற்பனையாளர்களுக்கு ரூ.100 முதல் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த பொருட்களுக்கு தடை?
பிளாஸ்டிக்கிலான பை, டம்ளர், கரண்டி, கத்தி, முள் கரண்டி, உறிஞ்சிக் குழாய், தட்டுகள், தெர்மாகோல் பொருட்கள், நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள், சமையலர் தொப்பி, குடிநீர் பாக்கெட், பேக்கிங் பொருள், பூச்செண்டு பரிசு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லேமினேஷன், தாள்கள். பேக்கரி பெட்டிகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், தோரணங்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்கள், எண்ணெய், மருந்து மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை பேக்கிங் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இது பொருந்தாது.